சக்கராசனம் (Chakrasana or Urdhva Dhanurasana)
இது ஒரு அரை வட்டம் போல் தோற்றமளிப்பதால் இதற்கு சக்கராசனம் என்று பெயர்.
சக்கராசனம் பயிற்சி செய்யும் முறை :
தரையில்மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள் பின்னர் இரு முழங்காள்களையும் மடக்கிப் பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டியிராமல் சௌகரியமாக விலகியிருக்க வேண்டும்.
கைகளைப் பின்புறமாகக் கொண்டு சென்று காதுகளுக்கப் பக்கவாட்டில் உள்ளங்கை தரையில் பதியும்படி ஊன்றிக் கொள்ள வேண்டும்.
படுத்த நிலையிலேயே இடுப்பு, வயிற்றுப் பகுதியை மேலே தூக்க வேண்டும். கால்களை விரைப்பாக ஊன்றி வளைத்து நிற்க வேண்டும். இப்போது உடல் எடை கைகளிலும், பாதங்களிலும் இருக்கும்.
உடம்பை இவ்வாறு மேலே தூக்குவதற்கு முன்னதாக மூச்சை ஒரு தடவை ஆழுமாக உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும்.
ஆசனத்தில் இருக்கும் வரையில் சுவாசம் ஆழமாகவும் மெதுவாகவும் இழுத்து விடப்பட்ட வேண்டும். ஆசனத்தை கலைக்கு முன் சுவாசத்தை ஒரு தடவை ஆழமாக உள்ளிழுத்து கொண்டு அதன் பிறகே உடம்பை மெதுவாகக் கீழே இறக்கித் தரைக்குக் கொண்டு வர வேண்டும்.
சக்கராசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
பத்து முதல் பதினைந்து வினாடிகள் நிறுத்தவும். இரண்டு மூன்று முறைசெய்யலாம்.
சக்கராசனம் பயிற்சியின் பலன்கள் :
இந்த ஆசனத்தைச் செய்யும் போது வயதில் முதியவர்கள் கூட இளமையும் வலிமையும் பெறுவதோடு, வளைந்து கொடுக்கும். தன்மையும் வாய்ந்த முதுகெலும்பையும் பெறுகிறார்கள்.
இந்த ஆசனத்தால் கண்பார்வை பிரகாசம் அடைகிறது, வயிற்று தொல்லையும், குமட்டலையும், மலச்சிக்கலையும் போக்குகிறது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு கை கண்ட சிகிச்சையாக உதவுகிறது.
சக்கராசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
இந்த ஆசனம் செய்யும் போது எடுத்த எடுப்பிலேயே கை கால்களின் பலத்தில் உடலை மேலே தூக்கி வில்லைப் போல வளைந்து நிற்பது எளிய காரியம் அல்ல. பயிற்சி கடினமாக இருப்பதற்காக இதை விட்டுவிடக் கூடாது. முடிந்த மட்டும் சிறிது சிறிதாக பழகினால் நாளடைவில் நன்கு தேர்ச்சி பெறலாம்.