சலபாசனம் (Salabhasana)
சலபா என்றால் வெட்டுக்கிளி. இந்நிலை ஒரு வெட்டுக் கிளி தரையில் அமர்ந்துள்ளது போன்று தோன்றுவதால் இப்பெயர்.
சலபாசனம் பயிற்சி செய்யும் முறை :
முகம் தரைநோக்கி இருக்குமாறு கவிழ்ந்து படுக்கவும். விரல்களை மூடி இரண்டு கைகளையும் வயிற்றுக்கு கீழே குப்புறவைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் விரைப்பாக நீட்டி இருக்க வேண்டும்.
இப்போது உடலை விரைப்பாக்கி கைகளை நன்றாக அழுத்தி இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும். அப்படியே தொடை, கீழ்வயிறு என்று பின்பக்க பாகங்களை மேல் நோக்கி உயர்த்தவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம்.
சலபாசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடிகள் இரண்டு மூன்று முறை செய்யவும்.
சலபாசனம் பயிற்சியின் பலன்கள் :
சிறுநீரகங்கள். கல்லீரல். போன்றமுக்கிய உறுப்புகள் அனைத்தும் இப்பயிற்சியின் மூலம் புத்துணர்ச்சி பெறுகின்றன. தவிரவும் வாயு, உபத்திரவம், வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல் போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.
சலபாசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :
வயிற்றில் ஆபரேஷன் செய்து கொண்ட ஆண்களோ பெண்களோ கண்டிப்பாக இப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. மீறி மேற்கொண்டால் ஆப்ரேஷன் செய்த இடத்தில் தையல் பிரிந்து பல கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.
தவிர மாரடைப்பு, இரத்த அழுத்தம், இருதய நோய், காசநோய் உள்ளவர்களும் இப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.
கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் இப்பயிற்சியை செய்யக் கூடாது. இதனால் கர்ப்பம் கலைந்துவிடக் கூடும். ஆதலால் பிரசவித்த பின்பு இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.