கூந்தல் பராமரிப்பு

பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் நீண்ட அழகான கூந்தல் வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆகவே உங்கள் கூந்தலைக் கவர்ச்சிகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதை சிறந்த முறையில் பராமரிப்பது அவசியமாகும். பொதுவாக முடி உதிர்வதற்கு முக்கிய காரணங்கள்: உடலின் உஷ்ணம், டென்சன், கண்ட கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவது தான். மேலும் நாம் உபயோகப்படுத்தும் சீப்பு, மருந்து மாத்திரைகள் இவற்றின் பாதிப்பாலும் முடி வளர்ச்சி சேதம் அடைகிறது. பெண்களின் கூந்தல் கோரமுடி, சுருட்டை முடி என வகைப்படும். அதற்கேற்றவாறு பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும் பெண்களின் கூந்தல் தன்மை நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நான்கு வகையான கூந்தலை பராமரிப்பது எப்படி

1. சாதாரண கூந்தல் (Normal Hair) 
2. எண்ணெய் பசையுள்ள கூந்தல் (Oily Hair)
3. வறண்ட கூந்தல் (Dry Hair)
4. பலவீனமான கூந்தல் (Dull Hair)

1. சாதாரண கூந்தல் (Normal Hair)

இவ்வகை கூந்தலானது வறண்ட தன்மை இல்லாமலும் எண்ணெய்த் தன்மை இல்லாமலும் மிதமான தன்மையுடன் தூய்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இத்தகைய கூந்தல் உடையவர்கள் அதிக கவலைப்பட தேவையில்லை. சாதாரண கவனிப்பே போதுமானது. எனினும் இவ்வகை கூந்தலை அக்கறை இன்றி பராமரிக்காமல் விட்டுவிடக் கூடாது.

2. எண்ணெய் பசையுள்ள கூந்தல் (Oily Hair)

இவ்வகை கூந்தலானது மிகுந்த எண்ணெய்த் தன்மையாய் காணப்படும். இதனால் கூந்தலில் அதிக அழுக்கும், தூசும் படிந்து காணப்படும். ஆகையால் இத்தகைய கூந்தலை உடையவர்கள் தினமும் குளித்து கூந்தலில் அழுக்கு படியாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கூந்தல் உடையவர்கள் எலுமிச்சைச்சாறு தடவி, மருதாணி (அ) சீயக்காய் கலந்த ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை சுத்தம் செய்வது நல்லது. மேலும் மாதம் ஒரு முறை மருதாணி பேக் பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெறலாம்.

எண்ணெய் பசை கூந்தலுடையவர்கள் செய்ய வேண்டியவை :-

எண்ணெய்த் தன்மையுள்ள கூந்தலை உடையவர்கள் தினமும் எண்ணெய் போட வேண்டிய அவசியமில்லை. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. அதிக நேரம் கூந்தலை சீவவும் கூடாது. சிறிது எலுமிச்சைச் சாறு, வினிகர் இரண்டையும் ஒரு கப் நீரில் கலந்து கூந்தலை கடைசியாக அலசும் போது உபயோகிக்க வேண்டும். சீயக்காய், புங்கங்காய், திரிபலா மூன்றையும் காய்ச்சி வடிகட்டியோ (அ) பவுடர் செய்து குழைத்தோ ஷாம்பு போல் உபயோகிக்க வேண்டும்.

இரண்டு எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கப் தேயிலை நீரை சேர்த்து இவற்றுடன் சிறிதளவு நீரை கலந்து கூந்தலை கடைசியாக அலசும் போது உபயோகப் படுத்தினால் கூந்தலுக்கு மெருகு கிடைக்கும். மருதாணி 1 கப், தயிர் 2 கப், முட்டை 1, எலுமிச்சம் பழம் 1 இவற்றை நன்றாக கலந்து தலைமுழுவதும் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. வறண்ட கூந்தல் (Dry Hair)

இவ்வகை கூந்தலானது காய்ந்து வறட்சியால் முனைகள் இரண்டிரண்டாக உடைந்து காணப்படும். இக் கூந்தலின் நிறமும் செம்பட்டை தன்மை உடையதாய் இருக்கும். இத்தகைய கூந்தலை உடையவர்கள் சற்று அதிக கவனத்துடன் தங்கள் கூந்தலைப் பராமரிக்க வேண்டும். வறண்ட கூந்தலை உடையவர்கள் அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வர வேண்டும். அதாவது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சூடாக்கித் தலை ஓட்டில் படும்படி விரல் நுனிகளால் அழுந்த தடவி 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, எண்ணெய்ச் சுரப்பிகளின் செயலும் துரிதப் படும். மேலும் உடல் உஷ்ணம் குறைக்கப்பட்டு குளிர்ச்சி தன்மை அடையும். வறண்ட கூந்தல் உடையவர்கள் முட்டை ஷாம்பு (அ) நெல்லிக்காய் ஷாம்பு பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.

இவ்வகை கூந்தலானது காய்ந்து வறட்சியால் முனைகள் இரண்டிரண்டாக உடைந்து காணப்படும். இக் கூந்தலின் நிறமும் செம்பட்டை தன்மை உடையதாய் இருக்கும்.

வறண்ட கூந்தலுடையவர்கள் செய்ய வேண்டியவை:-

வறண்ட கூந்தலுக்கு மசாஜ் செய்ய கற்றாழை எண்ணெய், நல்லெண்ணெய், செம்பருத்தி எண்ணெய் இவற்றைப் பயன்படுத்தினால் முடிக்கு வறண்ட தன்மை நீங்கி எண்ணெய் சத்து கிடைக்கும். மசாஜ் செய்வதற்கு முன் துவாலையினால் ஆவி ஒத்தடம் கொடுப்பது நல்லது.

தலைக்கு குளித்த பின் கடைசியில் சிறிதளவு கருப்பு வினிகர், எலுமிச்சை சாறு இவற்றை நீரில் கலந்து அலசினால் நல்ல பலன் கிடைக்கும். பாலேடுள்ள பாலில் ஒரு முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நன்கு பலன் காணலாம். 

வறண்ட கூந்தலுக்கு சாதாரண ஷாம்பு உபயோகிப்பதை விட முட்டை ஷாம்பு உபயோகிப்பது நல்லது. சியக்காய் உபயோகித்து முட்டை பேக் போட சிறந்த பலன் பெறலாம்.   தலையில் நல்லெண்ணெய் தேய்த்துச் ஊற விட்டு, அரை மணி நேரம் கழித்து, சாதம் வடித்த கஞ்சியில் சிறிது சிகக்காய்த் தூள் போட்டுக் கலக்கி அதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கூந்தல் உதிர்வது நின்று, நன்கு வளரும்.

4. பலவீனமான கூந்தல் (Dull Hair)

இவ்வகை கூந்தலானது எளிதில் உடையும் தன்மை உடையதாய் ஜீவனற்று காணப்படும். வெயிலில் அதிகமாக அலைவது, நேரம் தவறி உண்பது, உப்பு நீரை தலைக்கு குளிப்பதற்கு உபயோகிப்பது போன்ற பல காரணங்களால் கூந்தல் பலவீனமாகி விடுகிறது. இத்தகைய கூந்தலை  உடையவர்கள் தலைக்கு குளித்தவுடன் ஈரத்திலும், எண்ணெய் தேய்த்தவுடனும் தலையை வாரக் கூடாது. கூந்தலின் வேர்ப் பகுதி பலவீனமாக இருப்பதால் நிறைய முடி கொட்டக் கூடும். 

இவ்வகை கூந்தலானது எளிதில் உடையும் தன்மை உடையதாய் ஜீவனற்று காணப்படும். வெயிலில் அதிகமாக அலைவது,

மேலும் கூந்தலை டவலால் அடித்து காய வைக்கக் கூடாது. அதனால் கூந்தலுக்கு சேதம் உண்டாகி வெடிப்பு ஏற்படும். எனவே பலவினமான கூந்தல் உடையவர்கள் மாதம் இரண்டு அல்லது மூன்று முறையாவது ஆயில் மசாஜ் செய்து வந்தால் சிறந்த பலன் பெறலாம். மேலும் தினமும் ஒரு டம்ளர் கறிவேப்பிலை சாறு எடுத்து குடித்தால் மிகவும் நல்லது. (கறிவேப்பிலையை காய வைத்து பொடி செய்து உணவில் கலந்தும் சாப்பிடலாம்)

பலவீனமான கூந்தலுடையவர்கள் செய்ய வேண்டியவை:-

வைட்டமின் ஈ மாத்திரைகளையும், வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு வர வேண்டும். நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும். தினமும் மதிய உணவில் அரைக்கீரை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நீண்ட கூந்தல் வளரும்.

முளைக்கட்டிய கருப்பு கடலையை (கொண்டைக் கடலை) தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர தலைமுடி நன்கு வளரும். மருதாணியையும், கருவேப்பிலையையும் அரைத்து சாறெடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தடவி வர முடி கருமையாகவும், பளபளப்புடனும், நீண்டும் வளரும்.

நாட்டு வெங்காயத்தை இடித்துச் சாறெடுத்து அதனுடன் சோற்றுக் கற்றாழையை இரண்டாக பிளந்து அதில் உள்ள பிசினை எடுத்து இவற்றை இஞ்சிச் சாறு, தேங்காய் எண்ணெய், பொலுகிரீக் விதை ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றுடன் சேர்த்து பேக் போட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். முடி நன்கு வளரும். பளபளப்பாகவும் இருக்கும்.

பேன் தொல்லை தீர...

துளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு, வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீகக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது. மருதாணிப் பூவை இரவில் தலையில் வைத்துக் கொண்டால் பேன்களின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

பேன் தொல்லை இருந்தால் வசம்பை அரைத்து, விழுதைக் கொண்டு தேய்த்து அரைமணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்கள் மறையும். சிறிதளவு வினிகரை இரவில் தலையில் தடவி துணியால் சுற்றிக் கட்டி காலையில் தலைக்கு குளித்தால் பேன் தொல்லை நீங்கும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன் தொல்லைகள் நீங்கும்.

சீதாப்பழக் கொட்டையை இரண்டு நாள் நன்கு காய வைத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து இரவில் தலைக்கு தடவி காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை ஒழியும்.

வெள்ளை மிளகை பாலில் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

காட்டு சீரகத்தை பாலில் ஊற வைத்து அரைத்து (அ) தனியாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் குழைத்து இரவில் தலையில் பரவலாக தேய்த்து விட வேண்டும். காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.

பொடுகு தொல்லை தீர...

தேங்காய்ப் பால் அரை கப், எலுமிச்சைச் சாறு 4 தேக்கரண்டி மற்றும் ஊற வைத்து அரைத்த வெந்தயம் இம் மூன்றையும் கலந்து தேய்த்து ஊற வைத்து தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.

கரிசலாங்கண்ணி கீரை, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சைப்பழச் சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை பேக் பேட்டால் பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.

ஒரு கப் ஆப்பிள் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மிளகு எண்ணெய், தயிர், செம்பருத்தி பூ இவற்றைக் கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகு தொல்லை நீங்கும். வசம்பைத் தட்டி சிறிது நல்லெண்ணெயில் நன்றாக கருக வறுத்து அதைத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர பொடுகு தொல்லை நீங்கும்.

முல்தானி மட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக் கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும். தலையில் தயிர் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு பிறகு குளிக்க, பொடுகு நீங்கும்.

பொடுகுத் தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள் குளிக்க வைக்கும் வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.

வசம்பு சாறு, பொடுதலைச் சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். பொடுதலையை, பொடுகுயுள்ள தலைக்கு உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் தான் இதற்கு பொடுதலை என பெயர் வந்தது.

நாட்டு வெங்காயத்தை உரித்து அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும். வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய்யை உபயோகித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தைப் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும். பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

Previous Post Next Post