நெடுஞ்சாலை (Highway Road) உருவான வரலாறு

இன்று மனிதர்களை மிகவும் விரைவில் சந்திக்க வைப்பது அருமையான சாலைகள் உலகம் முழுக்க சாலைகள் மிக அற்புதமாக போடப்பட்டு மனிதர்களின் பயணங்கள் சுலபமாக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு முன்பு ஒற்றையடி பாதைகளும், மாட்டுவண்டி பாதைகளுமே மனிதர்களை இணைத்தன. அசோகர் சாலையோரமாக மரங்கள் நட்டார் என்று படிக்கிறோம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்? குண்டும் குழியுமாய்தான் இன்றும் பல கிராமப் பாதைகள் அப்படிதான் இருக்கிறது. எனினும் இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிக மிக நீண்ட சாலைகள் ஆனந்தமாய் பயணிக்க வைக்கின்றன. இன்று குறுக்குவழி சாலைகள் மிக வேகமாய் நாம் நினைக்கும் இடத்திற்கு. போகும் ஊர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. சாலைகளின் 'பெருக்கத்தால்' தொழில்கள் பெருக்கமடைந்தன. மனித பொருளாதாரம் உயர்ந்தது.

ஜான்லூதரன் மெக்ஆடம் (John Loudon McAdam)அவர்களின் இளமைப் பருவம்.

Biography of John Loudon McAdam - நெடுஞ்சாலையை உருவாக்கிய மேதை ஜான்லூதரன் மெக்ஆடம் அவரின் வாழ்க்கை வரலாறு ( 1756-1836 )

இன்றைய சாலைகளின் (Road) முன்னேற்றத்திற்கு மூலாதாரமாக திகழ்ந்தவர் ஜான்லூதரன் மெக்ஆடம் என்பவர் ஆவர். இவர் ஸ்காட்லாந்தைச் (Scotland) சேர்ந்தவர் 1756 - ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில்  அயர் (Ayr) எனும் ஊரில் பிறந்தார். பெரும் பணக்காரர் குடும்பத்தை சேர்ந்த அவர் உள்ளூரில் மிக பிரபலமான பள்ளியில் கல்வி கற்றார். மேல்நிலைப் பள்ளியில் படிக்கையில் அவரின் 16 - ம் வயதில் தந்தையை இழந்தார். 1770 ஆம் ஆண்டு அவர் தனது சிறிய தந்தையாருடன் நியூயார்க்கில் (New York) வாழ்ந்து வந்தார்கள். தனது 20 - ம் வயதில் நியூயார்க் (New York) துறைமுகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அங்கு அவர் 'கப்பல்களை' ஏலம் விடும் பணியை செய்து வந்தார் அதனால் அவருக்கு நல்ல பணம் சேர்ந்தது. தந்தையின் பணமும் சேர பெரும் செல்வந்தர் ஆனார். 1781 - ஆம் ஆண்டு குளோரியானா நிக்கல் என்ற அமெரிக்க பெண்ணை, மணந்த அவர் இங்கிலாந்திலுள்ள 'சான்கி ' என்னுமிடத்தில் பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி குடியேறினார். மேலும் விவசாய பண்ணை ஒன்றை தொடங்கினார். துறைமுகத்தில் சிறந்த நிர்வாக பொறுப்புள்ளவராக திகழ்ந்ததால் அவ்வூர் பஞ்சாயத்து தலைவராகவும், ஊரை சீர்திருத்தும் பங்காளராகவும் இங்கிலாந்து அரசு அவரை நியமித்தது.

பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்ற அவர் முதன் முதலில் 'கையில்' எடுத்தது கரடுமுரடான பாதைகளை சீரமைப்பதையே! அவருக்கு சிறுவயதிலிருந்தே பாதைகள் மீது வெறுப்பிருந்தது. கரடுமுரடான குண்டும் குழியுமான பாதைகள் அவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவைகளை அரசு ஒழுங்காக பராமரிக்காதா என ஏங்கினார். பாதைகளில் கூழாங்கற்கள் போடப்பட்டு மக்கள் நடமாட முடியாமலும், மாட்டுவண்டிகள் போக முடியாமலும் அவஸ்தையாக இருந்தது.

இதை மாற்றி பாதையில் தரமான கற்களை போட்டு, அதன்மீது மேல் பூச்சு எதையாவது பூசி பாதை சீராக இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன் ஊர் பாதைகளை சோதனை சாலைகளாக மாற்றி மாற்றி வேறு வேறு கற்களை 'போட்டு' பாதைகளை அமைத்துப் பார்த்தார். 1789 - ஆம் ஆண்டு ஒரே வகையான கற்களை ஒரே அளவில் பாதையில் போட்டு நிரப்பி ... அதை சரியான அளவில் மட்டம் தட்டி ... பாதையை அமைத்தார்.

அது ஓரளவிற்கு மக்கள் சிரமமின்றி நடக்கவும், வண்டிகள் தடுமாற்றமின்றி போகவும் ஏதுவாக இருந்தது தன் ஊர் மட்டுமின்றி மற்ற ஊர்களும் இதே போல் ' செய்ததால் ' பாதைகளின் பிரச்னைகள் தீரும் என்று ஊர் ஊராக பிரசாரம் செய்தார். ஆனால் யாரும் கேட்கவில்லை அவர்கள் பழைய முறையிலேயே (கூழாங்கற்கள் போட்டு பாதை அமைப்பது) சென்றனர். தனது சொத்துகள் சிலவற்றை விற்று தன் ஊரில் தெருக்கு தெரு நல்ல பாதைகளை அமைத்தார். 1792 - ஆம் ஆண்டு அவ்வூர் பாதைகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவான சாலைகள் இருந்த காரணத்தினால் மக்கள் அவரை பாராட்டி புகழ்ந்தனர். மேலும் பாதைகள் மட்டுமின்றி முக்கிய இடங்களில் பாலங்கள் அமைப்பது பற்றியும், மழைக்காலங்களில் தெருக்களில் முக்கிய சாலைகளில் நீர் நிற்பதை பற்றியும் சிந்தித்தார்.

மேலும் ஊருக்கு ஊர் பாதைகள் மூலம் ... தொடர்பு கொள்ளும்படியாக அமைக்க வேண்டும் என்று விரும்பினார். இது குறித்து இங்கிலாந்தின் மிக முக்கியமான இஞ்ஜினியரான தாமஸ் மெல்போர்ட் அவர்களோடு ஆலோசனை செய்தார். மெக்ஆடமின் திட்டப்படி பாலங்கள் நீர் வடி பாதைகள் அமைத்தார் மெல்போர்ட், ( இன்றைய பாலங்களுக்கும் நீர் வடிகுழாய் பாதை அமைப்புகளுக்கும் மெக்ஆடமே முன்னோடி) மேலும் விஞ்ஞான முறைப்படி பாதைகளை அமைக்க வேண்டும் என்று விரும்பி அதைக் குறித்த திட்டத்தை இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி வைத்தார். அதாவது பாதைகளில் கற்களோடு, ஒருவித கலவையை கலந்து போட்டால். சாலைக் கற்கள் பெயராமல் நீண்ட வருடங்கள் பயன்படும் என்பதே அவரின் கோரிக்கை. மெக்ஆடமின் திட்டத்தை ஏற்றது இங்கிலாந்து அரசு. 1816 - ல் அவரின் 60 வயதில் தன் திட்டத்தை செயல்படுத்தினார்.

1819 - ஆம் ஆண்டு பல முக்கிய சாலைகள் குண்டு குழியுமில்லாமல் ஒரே அளவில். அழகாக போடப்பட்டிருப்பதை கண்டு இங்கிலாந்து மக்கள் அவரை பாராட்டினர். இரண்டு மணி நேரம் எடுத்து போய் சேர்ந்த ஊருக்கு இவர் பாதை போட்ட பின் அரை மணி நேரத்திலேயே சாரட் வண்டிகளில் போய் சேர்ந்ததை எண்ணி வியந்தனர். ஊர் ஊர்களுக்கு பாதை போடுவதை விடுத்து 'நெடுஞ்சாலை' திட்டத்தைப் பற்றி முதன்முதலில் யோசித்து அதே வருடம் அதை செயல்படுத்த ஆரம்பித்தார். (இன்றைய நெடுஞ்சாலை திட்டத்தின் ஆதிகர்த்தா இவரே) அவரின் சாலை அமைக்கும் திட்டங்களுக்கு அரசு பரிபூரணமாக அனுமதி அளித்தது.

1829 - க்குள் இங்கிலாந்து முழுவதிலும் பாதைகள் அருமையாக போடப்பட்டன. அவர் போட்ட பாதைகளில் கற்கள் பெயர்ந்திடாமல் வருடக்கணக்கில் இருக்கும்படி செம்மைப் படுத்தப்பட்டிருந்தன. அவரின் சாதனையை இங்கிலாந்து அரசு பாராட்டி புகழ்ந்தது. நல்ல தரமான பாதைகளை அவர் அமைத்ததால் தொழில்வளம் பெருகி... புதிய தொழில் புரட்சி ஏற்பட்டது எனலாம். மேலும் அவரின் சாலை அமைக்கும் முறைகளை ஜெர்மனி , அமெரிக்கா , இத்தாலி போன்ற நாடுகள் கேட்டு அதன்படி செயல்படுத்தின.

1825 - ஆம் ஆண்டு அவரின் சாலை அமைப்பு முறைகளை பாராட்டி அவருக்கு சாலை தொழிலாளர்கள் வெள்ளி மண்வெட்டியை பரிசாக அளித்து பெருமைப்படுத்தினர். தன்னுடைய முதிய வயதிலும் அதைப் பொருட்படுத்தாமல் சாலைகளை சீரமைப்பதிலேயே தன் காலத்தை கழித்தார் மெக்ஆடம். சாலைகளின் பிதாமகனான அவர் 1836 - ஆம் அண்டு தன் 80 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும் இன்றைய பாதை அமைப்புகளுக்கு முன்னோடியான அவரை நாம் மறந்தாலும் சாலைகளும், சாலைகளில் செல்லும் வாகனங்களும் மறக்காது என்பது உண்மை. தன் சொத்து முழுவதையும் சாலைகளின் அமைப்புக்களுக்காக பயன்படுத்திய அவருக்கு அவர் மறைந்த பின் 1860 - ல் இங்கிலாந்து அரசு அவரின் பிள்ளைகளிடம் வீர விருதையும், பெரும் பரிசு பணத்தையும் அளித்து அவரை கௌரவித்தது அவரின் அயராத உழைப்பின் விளைவுதானே! சாலைகளின் மறு பெயர் மெக்ஆடம். இதை எவரும்  மறக்காதீர்.

Previous Post Next Post