Helen Keller

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். அதுவும் எப்படி கூன் குருடு இல்லாமல் பிறத்தல் அதனினும் அரிது என்றார். ஒரு மனிதர் குருடராய் இருந்தால் அவர் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையை ஓட்டிவிடுவார். குருடராய் பிறந்து கூடவே கேட்கும் திறனின்றி செவிடராயும், பேச்சுத்திறனின்றி ஊமையாயும் இருந்தால் அவரால் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? இவ்வாறு பார்வையின்றி, பேசும் திறனின்றி, ஊமையாய் ஒரு ஆணிருந்தால் எப்படியோ காலத்தை கழித்து விடுவான். 

ஒரு பெண் இவ்வாறாக ஊமையாய் இருந்தால் அவளால் இவ்வுலகில் சாமான்யமாய் வாழ முடியுமா? வாழ்ந்தால் அப்பெண் தன் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் தன்னால் இவ்வுலகில் சாதிக்க முடியும் என்று பல சாதனைகள் புரிந்து பெண் குலத்திற்கு ஒரு விடிவெள்ளியாய் திகழ்ந்தவர். 

பார்வையற்றோரின் வழிகாட்டியாக திகழ்ந்தவர்,ஹெலன் கெல்லர்,(Helen Keller) !!!

அவர்தான் Helen Keller. 1880 - ஆம் ஆண்டு, ஜூன் 27 - ம் தேதி அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் Helen Keller அழகாய் பிறந்தார். ஆரோக்கியமாய் இருந்தார். பெற்றோர் ஆர்தர் கெல்லர் - கேட்டி ஆடம்ஸ். அவருக்கு ஒன்றரை வயதானபோது ஒரு நோய் தாக்க பார்வை, செவிப்புலன், பேசும் திறன் மூன்றும் பறிபோயின. பெற்றோர்கள் அதிர்ந்தனர். மகளின் நிலையைக்கண்டு கண்ணீர் விட்டு கதறினர். பல மருத்துவர்களிடம் ஹெலனை காண்பித்தனர். அவர்கள் கையை விரித்தனர். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. குழந்தை வாழ்நாள் முழுக்க பார்வையற்றவராய், செவிடாய் , ஊமையாய்தான் இருப்பார் என்று கூறி அனுப்பிவிட்டனர். 

தனக்கு இத்தனை பிறவி ஊனங்கள் இருப்பதை உணர்ந்த கெல்லர் தன்னாலும் இவ்வுலகில் மற்றவர்கள் போல சாதிக்க முடியும் என்று தனக்குள் உறுதி கொண்டாள். மகள் வளர அவருக்கு பாடம் நடத்த அன்னி மேன்ஸ் ஃபீலட் சல்லினன் என்ற 20 வயது பெண்ணை நியமித்தனர். இவரும் சிறு வயதில் பார்வையற்றவராய்தான் இருந்தார். ஆனால் பார்வைக்கான சிகிச்சை பெற்றதால் ஓரளவு பார்வையை பெற்றார். அதை வைத்து நன்றாக கல்வி கற்று பார்வையற்றவர்களுக்கான ஆசிரியையாக மாறினார். 

அவர் கெல்லருக்கு ஆசிரியையாய் வந்தது நமது மொழியில் சொல்லப்போனால் தவப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் பாடம் நடத்தும்போது பல தொல்லைகளை கொடுத்தார் கெல்லர். அதனை எல்லாம் பொறுமையாய் சகித்து அவரை மேதையாக்கியது அன்னிதான். அன்னி இல்லையெனில் கெல்லர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கெல்லருக்கு நல்ல சினேகிதியாய், ஆசிரியையாய், வழிகாட்டியாய் அவர் திகழ்ந்தார். 

தன் மாணவி மிகச்சிறந்த அறிவாளி என்பதை புரிந்து கொண்டார் அன்னி. பார்வையற்ற கெல்லருக்கு விரல்களால் பொருட்களை தொட்டுக் காட்டி மொழியைக் கற்றுக் கொடுத்தார். பி.ஏ.எல்.எல் என்று பந்துக்கான வார்த்தை சொல்வதோடு பந்தை தட்டச் செய்து அதன் செயலை விளக்கமாக சொல்லிக் கொடுப்பார். இவ்வாறு காய்கள், பழங்கள், பூக்கள், வீட்டுப்பொருட்கள் அனைத்தையும் தொட்டு தொட்டு பார்த்து கெல்லரை பழக்கினார் அன்னி. கெல்லரும் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை கற்பூரமாய் பற்றிக் கொண்டார். பின்னர் அட்டையில் பிரெய்லி முறையில் பாடங்களை கற்றுக் கொடுத்தார்.

வீட்டிற்குள்ளேயே மாணவிக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்காமல் வெளியிடங்களுக்கு தன் மாணவியை அழைத்துச் சென்றார் அன்னி. கடைகள், பூங்காக்கள், சிற்பக்கூடங்கள், மியூசியம், மிருககாட்சி சாலை என்று பல இடங்களுக்கு கெல்லரை அழைத்துச் சென்றார். வெளியிடங்கள் கெல்லரை பரந்த அறிவாளியாய் உருவாக்கியது. அவர் கோவேறு கழுதை சவாரி செய்தார். படகை ஓட்டினார். 

பனிசறுக்கு விளையாட்டில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். வீட்டில் பெற்றோர்களுக்கு உதவிகள் செய்தார். மற்றவர்களோடு விளையாடினார். பிரெய்லி முறையில் பல நூல்களை படித்தார். சிலருக்கு கடிதங்கள் எழுதினார். சில பத்திரிகைகளுக்கு கதைகள் , கட்டுரைகள் எழுதினார் . அவரின் சாதனைகள் வெளி உலகில் பரவ ஆரம்பித்தன . பலர் அவருக்கு உதவ முன் வந்தனர் . பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவளை முன்னுதாரணமாய் காண்பித்தனர் .

அவர் அன்னியின் திறமையான பயிற்சியால் பிரெஞ்சு மொழியையும் , கணித பாடங்களையும் நன்கு கற்றுக் கொண்டார் . தன் 16 - ம் வயதில் கல்லூரியில் சேர நூழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றார் . தன்னுடைய 23 - ம் வயதில் என் வாழ்க்கை கதை என்ற நூலை எழுதினார் . அந்த நூல் உலகப்புகழ் பெற்றது . இன்றும் அந்த நூல் சிறந்த விற்பனை நூலாக திகழ்ந்து வருவது மாபெரும் சாதனை . இந்த நூலை அடுத்து நான் வாழும் உலகம் என்ற சிறந்த நூலை எழுதினார் கெல்லர் . தன் ஊனங்களை அவர் துயரமான ஒன்றாய் எடுத்துக் கொள்ளவில்லை . அவரும் மற்றவர்களைப்போல சர்வ சாதாரணமாய் வாழ்ந்தார் . தன்னைப்போல ஊனமுற்றவர்களும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்பினார் . குருடர் , செவிடர் , ஊமையர்களுக்கு உதவ Helen Keller நிதி ஒன்றை ஆரம்பித்தார் . உலக மக்கள் அவருக்கு உதவினர் . அவர் அதை மற்றவர்களுக்கு வழங்கினார் .

ஹெலன் பல இடங்களுக்கு சென்று தன் கருத்துக்களை கூறினார் . பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தன . அங்கெல்லாம் சென்று பேசினார் . ஊனமுற்றவர்களின் அதாவது மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார் . ஊனம் ஊமையல்ல என்று பலருக்கு ஊக்கம் கொடுத்த அவரின் சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கின பல நிறுவனங்கள் . 

ஹெலன் உலகப்பயணம் மேற்கொண்டார் . அதன்மூலம் பல் அறிவுநோக்கு ஏற்பட்டது . 1936 - ல் தனது ஆசிரியை அன்னி மறைவு அவரை துயரப்படுத்தியது . தனது முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்த அவரை நினைத்து கண்ணீர் சிந்தினார் . இரண்டாம் உலக யுத்தத்தில் பார்வையிழந்த வீரர்களுக்கு சேவை புரிந்தார் .

உலகம் முழுக்க பார்வையற்றோருக்கான பள்ளிகளை துவக்க ஆவன செய்தார் Helen Keller . 1955 - ஆம் ஆண்டு இந்தியா வந்த கெல்லர் , சென்னை , ஊட்டி , பெங்களூர் , டெல்லி , காஷ்மீர் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்தார் . ஊனமுற்ற எந்த நிலையிலும் ஒரு பெண்ணால் பல சாதனைகள் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய கெல்லர் 1968 - ஆம் ஆண்டு ஈஸ்டன் நகரில் மறைந்தார் . ஒரு மனிதன் தன் மனத்துணிவால் மாபெரும் சாதனைகளை படைக்க முடியும் . 

அதன்மூலம் இவ்வுலகில் வெற்றி வீரராய் திகழ முடியும் என்பதற்கு Helen Keller மாபெரும் எடுத்துக்காட்டு என்று நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கெல்லர் மறைவுக்கு இவ்வாறு கூறி அஞ்சலி செலுத்தினார் . எத்தனை அற்புதமான வார்த்தைகள் . இன்றைய மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளுக்கு முன்னோடியாய் திகழ்ந்த கெல்லரை என்றென்றும் நினைப்போம் . வாழ்க அவரின் சாதனை .... தொண்டு ...

Previous Post Next Post