அழகான முகத்திற்கான பராமரிப்பு:

பொதுவாக மனித உருவமைப்பில் உணர்ச்சியின் வெளிப்பாடாக பெரும்பாலும் முகமே அமைகிறது. ஒவ்வொருவரின் இன்ப, துன்ப மற்றும் பல வகை உணர்ச்சிகளை முகமே காட்டுகிறது, மேலும் ஒருவரின் அழகு தன்மை அவரின் முகத்தைக் கொண்டே அமைகிறது.

பொதுவாக மனித உருவமைப்பில் உணர்ச்சியின் வெளிப்பாடாக பெரும்பாலும் முகமே அமைகிறது. ஒவ்வொருவரின் இன்ப, துன்ப மற்றும் பல வகை உணர்ச்சிகளை முகமே காட்டுகிறது, மேலும் ஒருவரின் அழகு தன்மை அவரின் முகத்தைக் கொண்டே அமைகிறது.

எனவே ஒவ்வொருவருக்கும் அவரவர் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் நிறையவே உண்டு. உங்கள் முகத்தை அழகு படுத்துவதற்கு முன் அது எந்த வகை-யானது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஐந்து வகையான சருமங்கள் உள்ளன.

1. சாதாரண சருமம் (Normal Skin) 
2. எண்ணெய் பசையுள்ள சருமம் (Oily Skin)
3. வறண்ட சருமம் (Dry Skin)
4. எண்ணெய்ப் பசையும், வறட்சியும் கொண்ட சருமம் (Combination Skin)
5.உணர்ச்சியும், மென்மையும் கொண்ட சருமம் (Sensitive Skin)

தங்களுடைய தோல் எந்த வகையானது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப அழகுப் படுத்தினால் மிகவும் பொருத்தமாகவும், வசீகரமாகவும் இருக்கும். தங்கள் சரும வகையை தெரிந்து கொள்ள இதே ஓர் எளிய பரிசோதனை.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் மை உறிஞ்சும் தாளைக் (Tissue Paper) கொண்டு முகத்தில் ஒற்றியெடுக்க வேண்டும். தாளில் ஒரே சீராக மிதமான எண்ணெய்ப் பசை படிந்திருந்தால் உங்கள் சருமம் சாதாரண வகை சருமம்; தாளில் அதிகப் படியான எண்ணெய் பசை படிந்திருந்தால் உங்கள் சருமமானது எண்ணெய் பசையுள்ள சருமமாகும்; தாளில் எண்ணெய் பசையே இல்லாமல் இருந்தால் உங்கள் சருமம் வறண்ட சருமம்; 

தாளில் ஒரு பகுதி மட்டும் எண்ணெய் படிந்திருந்தால் அதாவது நெற்றி, மூக்கு, தாடைப் பகுதிகளில் மட்டும் எண்ணெய்ப் பசையும், கன்னப் பகுதியில் வறண்டும் காணப்பட்டால் உங்கள் சருமம் காம்பினேசன் சருமம்; சிறிது எண்ணெய்த் தன்மையுடன் மிகவும் மென்மையாக அதாவது இலேசாக கிள்ளினாலே தடம் பதிந்து சுருக்கங்கள் விழும் சருமம் சென்சிட்டிவ் சருமம் ஆகும். இவ்வாறு அவரவர் சருமத் தன்மையை தெரிந்து கொள்ளலாம்.

1. சாதாரண சருமம் பராமரிப்பது எப்படி (Normal Skin)

சாதாரண சருமம் உடையவர்கள் அதிகம் கவலைப் தேவையில்லை. மேலும் இவ்வகை சருமத்திற்கு பட அதிக கவனிப்போ, போஷாக்கோ தேவையில்லை. சாதாரண கவனிப்பே போதுமானது. மேலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மசாஜ் செய்து அதற்கேற்றவாறு பேக் போட்டு வர சருமம் பொலிவு பெறும்.

சாதாரண சருமத்திற்கான பராமரிப்பு

பால், பாலேடு கொண்டு பேக் போடுவதால் சருமத்தில் உள்ள அழுக்கை இயற்கையான முறையில் நீக்குவ- தோடு, முகத்திற்கு பளபளப்பும் உண்டாகும். நேரம் கிடைக்கும் பொழுது (அ) வாரம் ஒரு முறை மசாஜ் செய்து பேக் போட்டு வந்தால் முகம் பள- பளக்கும். எலுமிச்சைச் சாறு, வெள்ளரிச்சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

ரோஸ் வாட்டரை பஞ்சில் முக்கி முகத்தில் ஒரே சீராக தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் புத்துணர்ச்சி பெறும். எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு முகம் பொலிவு பெறும். எலுமிச்சைச் சாறுடன் பாலேடு கலந்தும் முகத்தில் பூசி வரலாம்.

2. எண்ணெய் பசையுள்ள சருமம் பராமரிப்பது எப்படி (Oily Skin)

எண்ணெய் பசையுள்ள சருமம் பார்ப்பதற்கு 'பளபள' என்று தோற்றமளித்தாலும் விரைவில் தூசியும், அழுக்கும் சேர்ந்து விடும். இதனால் இவ்வகை சருமம் உடையவர்களுக்கு அதிக எண்ணெய் பசை காரணமாக முகப்பருக்களும் வரக்கூடும். ஆதலால் முகத்தை அடிக்கடி கழுவினால் தான் சுத்தமாய் இருக்கும். இந்த வகை சருமம் உடையவர்கள் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் கூடாது. பழங்கள், பால் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கான பராமரிப்பு:

தேன், ஆரஞ்சுப் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தாணி மட்டித் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நன்கு காய்ந்த பின்பு கழுவி வர சருமம் பொலிவு பெறும்.

வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிச் சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும்.

முட்டையின் வெள்ளைக் கரு ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு சில துளிகள் மூன்றையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர சருமத் துவாரங்கள் இறுக்கமாவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

நன்றாக பழுத்த வாழைப் பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ வேண்டும். நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர அதிகமாக எண்ணெய் சுரப்பதைக் கட்டுப்படுத்து- வதோடு நல்ல போஷாக்கையும் தருகிறது.

மோரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து வர துவாரங்கள் விரைவில் மறையும். ஈஸ்ட் 1 தேக்கரண்டி, பால் 4 தேக்கரண்டி, சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

3. வறண்ட சருமம் பராமரிப்பது எப்படி (Dry Skin)

இவ்வகைச் சருமம் பார்ப்பதற்கு வறண்டும், பொலிவு இழந்தும் காணப்படும். ஏனெனில் இவ்வகை சரும் துவாரங்கள் தேவையான அளவு எண்ணெய் சுரப்பது இல்லை. இதனால் இவ்வகை சருமம் உடையவர்களுக்கு விரைவில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். இவ்வகை சருமத்திற்கு அதிக கவனிப்பு தேவை.

இவ்வகை சருமம் உடையவர்கள் சூரியக் கதிர்கள், செயற்கைக் காற்று, இரசாயனப் பொருட்கள் இவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும். மேலும் இவ்வகை சருமத்திற்கு சோப்பு உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் சோப்பு, எண்ணெய்ப் பசையை கட்டுப்படுத்தி விடுவதால் தோல்கள் அதிக வறட்சி தன்மை பெற்று பொலிவிழந்து விடும். 

ஆதலால் பயிற்றம்பருப்பு மாவு, கடலை மாவு இவற்றைக் கொண்டு தேய்த்து முகம் கழுவினால் அழுக்கு நீங்குவதோடு முகம் பளபளப்படையும். இவ்வாறு முடியாதவர்கள் பேபி சோப்பைக் கொண்டும் முகத்தைக் கழுவலாம். வறண்ட சருமம் உடையவர்கள் அதிக நீர், பழச் சாறுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு வறண்ட சருமத்திற்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வந்தால் வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் பொலிவடையும். ஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கங்கள் மறைந்து விடும்.

பாலேட்டில் நன்றாக அடித்த முட்டை 1, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தைக் கொடுத்து சருமத்தை மிருதுவாக்கும். முட்டைக் கோஸ் சாறு, ஈஸ்ட், தேன் இவற்றைச் சமஅளவில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.

2 தேக்கரண்டி அரைத்த தேங்காய், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் கலந்து முகத்தில் நன்றாக பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தின் எண்ணெய்ப் பசையை சமநிலைப் படுத்துவதோடு, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பாலேட்டில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி முகம் பளபளப்பாகும். சூடு செய்த ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மாத்திரைகள் 2, வைட்டமின் ஏ மாத்திரை 1, வைட்டமின் டி மாத்திரை 1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் வட்டமாக தேய்த்து பின் 10 நிமிடங்கள் கழித்து டவலால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இந்த பேக் மிகவும் உலர்ந்த சருமத்தின் வறட்சியை நீக்குவதோடு ஊட்டத்தைக் கொடுத்து பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

4. எண்ணெய்ப் பசையும், வறட்சியும் கொண்ட சருமம் பராமரிப்பது எப்படி (Combination Skin)

இந்த வகைச் சருமம் நெற்றி, மூக்கு, தாடைப் பகுதிகளில் எண்ணெய்ப் பசையுடனும் மற்ற பகுதிகள் வறண்டும் இருக்கும். எனவே இரண்டு பகுதிகளையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டும். இவ்வகை சருமம் உடையவர்கள் மாதம் ஒருமுறையாவது மசாஜ் செய்து பேக் போட வேண்டும். இத்தகைய சருமம் உடையவர்கள் கிளிசரின், துளசி, வேம்பு மற்றும் சந்தன சோப்புகளை உபயோகிக்கலாம்.

எண்ணெய்ப் பசையும், வறட்சியும் கொண்ட சருமத்திற்கான பராமரிப்பு விட்டமின் "ஈ" எண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வர சருமம் பொலிவு பெறும். தேன், தயிர், பயிற்றம்பருப்பு மாவு இம்மூன்றையும் சமஅளவில் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து மிதமான வெந்நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் ஒரே சீரான பளபளப்பு தன்மை உடையதாகவும், மென்மையாகவும் இருக்கும்.

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை மசித்து அத்துடன் தேன் ஒரு தேக்கரண்டியளவு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமம் ஈரத் தன்மையுடையதாய் பொலிவு பெறும்.

5.உணர்ச்சியும், மென்மையும் கொண்ட சருமம் பராமரிப்பது எப்படி (Sensitive Skin)

இவ்வகைச் சருமம் மிக மெல்லியதான தோல்களை உடையதாய் இருப்பதால் எந்த வகை இரசாயனக் கலவை கொண்ட கிரீம்களை பயன்படுத்தினாலும் உடனே அலர்ஜி ஏற்பட்டு நமைச்சலும், தடிப்பும் உண்டாகும். எனவே இவ்வகை சருமத்திற்கு இயற்கை பொருட்களை கொண்டு தான் பேக் போட வேண்டும். அதாவது உருளைக்கிழங்கு, கேரட், தர்ப்பூசணி, பப்பாளிப்பழம், தேங்காய், வாழைப்பழம் இவற்றினால் தயாரிக்கப்பட்ட "பேக்" களை தான் போட வேண்டும்.

உணர்ச்சியும், மென்மையும் கொண்ட சருமத்திற்கான பராமரிப்பு

கேரட்டை துருவி அரைத்து சாறெடுத்து, அத்துடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். கேரட் சாறு சருமத்திற்கு மிகவும் நல்லது. இதனால் சருமம் நிறமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

தேங்காய் பாலுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகம் கவர்ச்சியாகவும், பொலிவாகவும் இருக்கும்.  கடற்பாசியுடன் சிறிதளவு பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். கடற்பாசியில் வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் ஈ நிறைந்துள்ளதால் சருமத்திற்கு சத்தைக் கொடுப்பதோடு இளமையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

உருளைக் கிழங்கை தோல் நீக்கி பொடியாக சீவி அத்துடன் சிறிதளவு கடற்பாசி, பால் (அ) தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சிறிதளவை பேக் போட்டு நன்கு காய்ந்த பின் கழுவி வர முகம் சுருக்கம் இல்லாமல் இளமையாய் இருக்கும்.

தர்ப்பூசணி பழத்தை நன்கு மசித்து சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி கழுவ வேண்டும். முகத்திற்கு நல்ல பொலிவு கிடைப்பதோடு சருமத்தை இளமையாகவும் வைத்துக் கொள்ளும்.

Previous Post Next Post