இன்டர்நெட் அறிமுகம்
1969-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் 'இன்டர்நெட்' எனும் வலையமைப்பு. இணையதளத்திற்குச் சென்று சில வார்த்தைகளை 'டைப்' செய்தால் போதும். உலகம் உங்கள் விரல் நுனியில் வந்து விடும்.
'இன்டர்நெட்' என்றால் என்ன?
எண்ணற்ற சிறு சிறு வலையமைப்புகளை இலக்க முறையில் இணைத்து அமைக்கப்பட்ட பூகோள கணினி வலையமைப்புதான் இன்டர்நெட். ஆங்கிலத்தில் இதை 'இன்டர்கனெக்டட் நெட்வொர்க் ஆஃப் நெட்வொர்க்ஸ்' (Inter Connected Network of Networks) என்று அழைக்கிறார்கள். இதன் சுருக்கமே 'இன்டர்நெட்' என்று ஆனது.
இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
இன்டர்நெட்டைக் கண்டபிடித்தவர் இவர்தான் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பல ஆராய்ச்சியாளர்கள், பல அரசு தொழில்நுட்ப வல்லுனர்களின் முயற்சியால் கிடைத்ததுதான் இன்டர்நெட். இருப்பினும் அமெரிக்க ராணுவ தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்கு இதில் அதிகம் உள்ளது.
இன்டர்நெட் எவ்வாறு தொடங்கப்பட்டது?
அமெரிக்கா-ரஷ்யா இடையே ‘பனிப்போர்' நடந்த காரணத்தால் இன்டர்நெட் உருவானது. 1957-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கூட்டமைப்பு (அன்றைய ரஷ்யா) 'ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மேம்பட்ட ஆய்வுத் திட்டங்கள் மையம் (Advanced Research Projects Agency - ARPA) என்ற அமைப்பை நிறுவியது. இதன்மூலம் பல தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையைப் பயன்படுத்தி செயற்கைக்கோளை அமெரிக்கா தயாரித்தது.
1960-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு நிலையான தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள் கம்ப்யூட்டர் வலையமைப்பின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இதன் மூலம் கம்ப்யூட்டர் வலையமைப்பு சாதனம் பழுதடைந்தாலும், மின் தடை ஏற்பட்டாலும் கூட தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும்.
முதல் கணினி வலை தளம் எங்கு செயல்பட ஆரம்பித்தது?
அமெரிக்காவின் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதல் கணினி வலை தளம் செயல்பட்டது. கணினி அறிவியல் பேராசிரியர் லென் லீன் ராக் என்பவர் மாணவர் குழுவின் உதவியுடன் 'APRA' தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 900 பவுண்டு எடையுள்ள கணினியைக் கொண்டு சோதனை நடத்தினார்.
இதன்மூலம் அவர்கள் 'யுதா பல்கலைக்கழகம்', 'கலிபோர்னியா பல்கலைக்கழகம்', 'ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிலையம்' ஆகிய இடங்களிலுள்ள கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் 'லாக்-இன்' (Login) என்ற சொல்லை டைப் செய்து தொலைதூரத்தில் உள்ள கணினியில் அது தோன்றுகிறதா என்று ஆராய்ந்தனர்.
பேராசிரியர் லீன் ராக் கூறும்போது, "நாங்கள் முதலில் எங்களுக்கும் ஸ்டான்ஃபோர்டு மையத்தில் உள்ளவர்களுக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொண்டோம். அவர்கள் Login என்ற வார்த்தையை டைப் செய்யும் அதே நேரத்தில் எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்பார்கள். "உங்கள் திரையில் 'L' எழுத்து தெரிகிறதா? "ஆம்". இப்பொழுது 'O' தெரிகிறதா? "ஆம்" இவ்வாறு உரையாடல் இருக்கும் என்று தெரிவித்தார்.
இவ்வாறாக ARPANET தோன்றியது. தொடர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் வெற்றி கண்டதன் மூலம் அங்கிருந்து வலைத்தொடர்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இன்டர்நெட் எவ்வாறு வேலை செய்கிறது?
முழு விவரங்களையும் இங்கு விவரிப்பது கடினம். நீங்கள் வலை தளத்தில் இணைப்பு ஏற்படுத்தி வலைதளத்தைப் பார்க்கும்பொழுது மற்றொரு கணினியிலிருந்து நீங்கள் தகவல்களை இலக்க முறையில் தேடுகிறீர்கள். நிரவுகளை (Data) கேட்பது மற்றும் பரிமாற்றம் போன்றவைகள் கணினி Protocol என்னும் கோட்பாட்டின்படி செயல்படுகின்றன.
இந்த Protocol கணினிக்கு என்ன செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறது. வலையமைப்பில் உள்ள அனைத்து கணினிகளும் TCP/IP என்றழைக்கப்படும் நிலைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகின்றன. உங்கள் கணினியில் உள்ள மற்ற நிலைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் HTTP (Hyper Text Transfer Protocol) போன்ற பல பணிகளைச் செய்ய உதவி புரிகின்றன.
இந்த HTTP பூகோள வலைதளத்தில் (world wide web www) தகவல்களை அனுப்பப்பயன்படுகிறது. நீங்கள் Protocol-ஐப் பற்றி புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கணினி ஒன்று மற்றொன்றைப் புரிந்து கொள்ளும் வழியாக இருக்கிறது.
இன்டர்நெட்டும் பூகோள வலைதளமும் (world wide web) ஒன்றா?
இல்லை. இன்டர்நெட் என்பது கணினிகளின் இணைப்பைக் கொண்ட வலையமைப்பு. பூகோள் வலைதளம் என்பது இன்டர்நெட்டின் ஓர் அங்கம். குறிப்பாகச் சொல்லப்போனால் வலைதளத்திலுள்ள கணினி இன்டர்நெட்டின் தகவல்களை பிரத்தியேக சாஃப்ட்வேர்கள் மூலம் இயக்குகிறது. 1989-இல் டிம் பெர்னர்ஸ் என்ற ஐரோப்பிய பௌதிக ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்ட Web Servers-இன் மொழிதான் HTTP.
“பூகோள வலைதளம் (world wide web) இணைய தளத்தை உருவாக்கவில்லை. இணைய தளத்தை பயனுள்ளதாகவும், விருப்பமுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது என்று கான்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியர் 'சூசன் காச்' கூறினார்.
இணையதளத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பகுதி என்ன? அதனைக் கண்டுபிடித்தவர் யார்?
இணைய தளத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பகுதி இமெயில் (மின் அஞ்சல்) ரே டாமில்சன் என்பவரால் 1971-இல் (ARPANET) அர்பாநெட்டிற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரவுசர் என்றால் என்ன?
பிரவுசர் என்பது இணைய தளத்தில் பார்ப்பதற்கு மற்றும் அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சாப்ட்வேர். உதாரணமாக Internet Explorer அல்லது Google Chrome, Opera.
கணினியில் வலைதள முகவரியை டைப் செய்து Enter பட்டனை அழுத்தும்போது என்ன நிகழும்?
நீங்கள் கணினியில் முகவரியை டைப் செய்து Enter பட்டனை அழுத்தும்போது வலைதளம் மூலமாக வெப் சர்வர் என்றழைக்கப்படும் சாதனம் நீங்கள் தேடும் தகவலை கண்டுபிடித்து மீண்டும் உங்கள் கணினியில் தெரிவிக்கும்.
இப்பொழுது உள்ள இணைய தளத்தைவிட விரைவானது உள்ளதா?
ஆம். இன்டர்நெட்-2 (Internet-2) என்றழைக்கப்படும் இது தற்பொழுது உள்ளதைவிட 100 மடங்கு அதிக வேகமுடையது. தற்பொழுது சில பல்கலைக்கழகங்களில், நிறுவனங்களில் மற்றும் கல்வி நிலையங்களில் மட்டுமே உபயோகப் படுத்தப்படுகிறது.