ரத்தப் பிரிவு  அறிமுகம்:

இன்று நாம் மருத்துவமனைக்குச் சென்றால்... உங்கள் ரத்தம் எந்தப் பிரிவு என்று கேட்கிறார்கள். நாமும் ஏ.பி.ஓ என்று நமது ரத்தப் பிரிவுகளை சொல்கிறோம். குறிப்பாக அறுவைசிகிச்சையின்போதும். விபத்தின்போதும், இரத்தப்பிரிவு மிகமிக வேண்டியதாக இருக்கிறது. இன்று ரத்த வங்கியில் ... ரத்தப் பிரிவுகளோடு ரத்தம் சேமிக்கப்படுகிறது... இதே 100 வருடங்களுக்கு முன்பு... ரத்தப்பிரிவுகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் போர்களினாலும் , விபத்துக்களினாலும், அறுவைசிகிச்சையின்போதும்... எத்தனை எத்தனை உயிர்கள் அநியாயமாய் போய் இருக்கும்? ரத்தப் பிரிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இளமைப் பருவம்:

Biography of Karl Lands Steiner - ரத்தப் பிரிவுகளை கண்டறிந்த விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் வாழ்க்கை வரலாறு (1868-1943)

மனித உயிர் வாழ்க்கைக்கு உத்தரவாதமான ரத்தப்பிரிவுகளை கண்டுபிடித்த உயிரியல் விஞ்ஞானி கார்ல் லாண்ட்ஸ் டெய்னர் (Karl Lands Steiner). இவர் 1868 - ஆம் ஆண்டு, ஜூன் 14 - ம் தேதி ஆஸ்திரியா நாட்டு தலைநகர் வியன்னாவில் பிறந்தார். பெற்றோர் - தந்தை லியோபோல்டு (1818-1875) தாய் பென்னி (1837-1908). லியோபோல்டு பத்திரிக்கையாளராக இருந்தார். கார்ல்க்கு 6 வயதாக இருக்கும்போது தந்தையார் இறந்தார். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த அவர் உயர்நிலை பள்ளிக் கல்வியையும் சிறந்த முறையில் படித்தார். அவருக்கு உயிரியல், வேதியியல், மருத்துவ படிப்புகள் மீது ஆர்வம் இருந்தது. 

1891-93 - ல் கெமிஸ்டிரி படிப்பை வேர்ஸ்பர்க்கில் முடித்தார். இவருக்கு இப்பாடத்திற்கு வழிகாட்டியாய் ஹ்மன் மில் பிஸ்சர் என்பவர் இருந்தார். பின்னர் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் 'வேதியியல்' விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில் 'மனித ரத்தம்' பற்றிய ஆய்வை மேற்கொண்டார். 1900 - ஆம் ஆண்டில் ஒரு புதுமையை செய்து பார்த்தார். இரு வேறு மனிதர்களின் ரத்தங்களை தனித்தனியே எடுத்துக் கொண்டார்.

 ரத்தப் பிரிவு கண்டுபிடிப்பு:

இரண்டு ரத்தங்களை கலக்கும்போது ஒன்று திரவமாகவும். மற்றொன்று உறைந்தும் இருப்பதைக் கண்டார். இந்த நிலை எப்படி ஏற்படுகிறது? என்று சிந்தித்தார். இரவும், பகலும் ஊன் (உணவு) உறக்கமின்றி ஆ ய்ந்து கொண்டே இருந்தார். ஆய்வில் தனக்கு உதவியாக அலெக்சாண்டர் எஸ். வெய்னரையும் சேர்த்துக் கொண்டார். இருவரும் இணைந்து ரத்தத்தில் ஆர்.ஹெச். காரணி (Rh. Factor) யை கண்டு பிடித்தனர். இந்த காரணி மூலமே அவர்கள் 'ஓ' பாசிட்டிவ், 'பி' பாசிட்டிவ் என ரத்தப் பிரிவுகளை கண்டறிந்து, மருத்துவ உலகிற்கு புதிய வெளிச்சத்தை வழங்கி, மனித உயிர்களை காக்க மாபெரும் - பேருதவியை செய்தனர். 

ரத்த பிரிவுகளை கண்டுபிடித்ததோடு மட்டுமின்றி ரத்தப் பிரிவுகளின் 'வடிவங்களை' கண்டு கூறினர். இவர்கள் கண்டுபிடித்த விதிகளுக்கு 'லாண்ட்ஸ் டெய்னர் விதிகள்' என்று இன்று அழைக்கப்படுகிறது. இன்று ரத்தம் தேவைப்படுவோர்க்கு உடனுக்குடன் ரத்தம் அளிக்கப்பட்டு உயிர்கள் காக்கப்படுகிறது என்றால் அதற்கு காரணம் டெய்னர் வெய்னர் என்ற இருவரின் அரிய கண்டுபிடிப்பே ஆகும்.

சாதனை விருது:

இவரின் அரிய, அற்புத உயிர் காக்கும் உன்னத கண்டுபிடிப்பிற்காக 1930 - ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவரின் அற்புத ரத்தப்பிரிவு கண்டுபிடிப்பை உலகமே இருகரம் கூப்பி மகிழ்ச்சியோடு வரவேற்றது. கார்ல் நோபல் பரிசு வாங்குகையில் 62 வயது என்றாலும் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார். நோய் எதிர்ப்பு சக்தி, திசுவின் வளர்ச்சி நோய் தொற்று. ரத்த நோய்கள், குழந்தைகளின் இரத்த நோய்கள் ஆகியவைகளை பற்றி ஆராய்ந்து மருத்துவ உலகிற்கு பல புதிய ஆரோக்கியமான ஜன்னல்களை திறந்து வைத்தார். பேராசிரியராகவும் தமது பணியை அருமையாக செய்தார்.  ரத்த ஆய்வின் மேன்மைக்காக உழைத்ததற்காக பல பல்கலைக் கழகங்கள் விருதுகளையும் , பட்டங்களையும் வழங்கி கௌரவித்தன.

மறைவு :

தனது ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு , 1943 - ஆம் ஆண்டு, ஜீன் 26 - ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். இன்று உலகின் ஒவ்வொரு மருத்துவரும் . மருத்துவமனைகளும், ரத்த சோதனை நிலையங்களும், அவரின் பெயரை நிமிடத்திற்கு நிமிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். 

"ஹலோ சார்... ரத்த வங்கியா? ""ஆமாம் ''" உடனே 'ஓ' பாசிட்டிவ் ரத்தம் வேணும். உடனே வாங்க... வாங்கிக்கிட்டு போங்க... உயிரைக் காப்பாதுங்க. இந்த உரையாடல்கள் இந்த நிமிடத்திலும் உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். 

ரத்தப் பிரிவுக்கு வகைக்கு வித்திட்ட வித்தகர் கார்ல்  லாண்ட்ஸ் டெய்னர் மனித வடிவில் தெய்வம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Previous Post Next Post