ஒளியின் அறிமுகம்:

அறிவியலில் மிகச் சிறந்த சாதனையாக கருதப்படுவது ஒளியின் வேகத்தை கண்டுபிடித்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளியின் திசைவேகத்தை கண்டுபிடிக்க பல விஞ்ஞானிகள் முயன்றனர், முடியவில்லை. காற்றில் ஒளியின் வேகம் நொடிக்கு எவ்வளவு? காற்றில்லாத பகுதியில் ஒளியின் வேகம் எவ்வளவு? பூமியிலிருந்து கிரகங்களின் தூரம் எவ்வளவு? அதை எவ்வாறு கண்டறிவது? என பல முனைகளில் விஞ்ஞானிகள் யோசித்தாலும் சரியான விடையை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒளியின் வேகத்தை உலகிற்கு முதன்முதலில் கண்டறிந்து அறிவித்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஆப்ரஹாம் மைக்கல்சன் ஆவார்.

இளமைப் பருவம்:

ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன்

போலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் அடங்கிக் கிடந்த பூமி. அங்கு 1852 - ஆம் ஆண்டு, டிசம்பர் 19 - ம் தேதி பிறந்தார் ஆல்பர்ட் ஆப்ரஹாம் மைக்கல்சன். அங்கு பிரச்சினை அதிகமாகவே 1854 - ஆம் ஆண்டு அவர் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. மைக்கல்சன் சான்பிரான்சிஸ்கோவில் வசித்த அத்தை வீட்டில் தங்கி படித்தார். படிப்பில் ஆர்வமுடையவராக இருந்த அவருக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வம் இருந்தது. குறிப்பாய் 'ஒளி'யின் அழகில் தன்னை இழந்தார். சூரியன்... நிலவு... விண்மீன்கள்... இவைகளிலிருந்து கிளம்பும் ஒளி மாறுபாடுகளை ரசித்தார். கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கப்பல் அகாடமியில் சேர்ந்தார். 

அவர் அறிவியல் நூல்களை படிக்கையில் 'ஒளியை பற்றியே விரும்பிப் படித்தார். 'ஒளி'யின் வேகத்தை பலர் பலவிதமான அளவு கோல்களில்.. கண்டுபிடித்தாலும் எதுவும் சரியானதாக இல்லாமல் இருந்தது. ஒளியின் வேகத்தை கண்டுபிடிக்க தன்னால் முடியுமா? என சிந்தித்தார் மைக்கல்சன். 'சவால்' நிறைந்த துறையாக அது இருந்தது. அகாடமி படிப்பு முடிந்ததும் அவரை இயற்பியல் துறை ஆசிரியராக அங்கேயே (அகாடமி) நியமித்தனர். இயற்பியல் மாணவர்களுக்கு மிக எளிமையான முறையில் பாடங்களை அவர் சொல்லிக் கொடுத்த விதம் கல்லூரியில் அனைவரையும் கவர்ந்தது.

கண்டுபிடிப்பு:

குறிப்பாய் 'ஒளியியல்' பற்றிய பாடத்தை அவர் மிகுந்த ஆர்வத்தோடு புகட்டினார். ஒளியின் வேகத்தை மற்ற விஞ்ஞானிகள் எவ்விதமாய் கண்டறிந்தார்களோ... இவர் கண்ணாடிகளைக் கொண்டே அதனை கண்டறியும் புதிய முறையை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். ஒளியின் வேகத்தைப் பற்றிய தீவிர ஆய்வின் முடிவில், ஒளியின் வேகத்தை மிகமிக துல்லியமாக கணித்துக் கூறினார். இன்றுவரை அவர் கூறியதையே விஞ்ஞான உலகம் உண்மையென நம்பி செயல்பட்டு வருகிறது. 

அதாவது காற்று வெளியில் ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,864 கி.மீ. எனவும், வெற்றிடத்தில் (காற்று இல்லாத சமயம்) அதன் வேகம் 2,99,940 கி.மீ எனவும் கூறினார். இக்கணக்குகளையே விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டது.

சாதனை விருது:

'ஒளி' மற்றும் இயற்பியலில் இவரின் சாதனையைப் பாராட்டி 1907 - ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இயற்பியலில் சிறந்த சேவைக்காக பல்வேறு விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றார். ஒளியின் வேகத்தைக் கொண்டுதான் விஞ்ஞானிகள் கிரகங்களின் தூரத்தை கண்டறிந்தனர். செவ்வாய் கிரகம் மற்றும் நிலவுக்கும் உள்ள தூரங்களை ஒளியின் வேகத்தை கொண்டு அளந்து அங்கு ஆய்வுக்குச் செல்ல 'ராக்கெட்'டை பயன்படுத்துகின்றனர். 'ஈத்தர்' என்ற பொருள் வழியாக ஒளி செல்வதாக அறிவியல் உலகம் நம்பி இருந்ததை இவர் மறுத்து ஈத்தர் வழியே ஒளி பயணிப்பதில்லை என்று மெய்ப்பித்தார்.

மறைவு :

'ஒளி'யினால் ஏற்படும் பயன்களையும் விவரித்தார். ஒளியில் உள்ள வாயுக்களினால் தொழில் விவசாயத்திற்கு எவ்வித பயன்கள் ஏற்படுகின்றன என்பதையும் கண்டறிந்து கூறினார். ' ஒளி'யின் வேகத்தையும், 'ஒளி'யின் பயன்களையும் ஆய்வு செய்ய தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த மேதையான மைக்கல்சன் 1931 - ஆம் ஆண்டு , மே 9 - ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். எனினும் ஒளியின் வேத்தை நாம் அறியும்போதெல்லாம் அவர் நம் நினைவில் வாழ்கிறார் என்பதை எவராலும் மறக்க இயலாது.

Previous Post Next Post